மீற்றர் வட்டி ஆளை தூக்குது

உங்களிற்கு தெரியுமா?? அதிகம் பரப்புங்கள்!! அங்கு கந்துவட்டி ஆளை எரிக்குது இங்கு மீற்றர் வட்டி ஆளை தூக்குது

என் தந்தையார் அடிக்கடி சொல்லும் கதை இது. ஒரு சமயம் தருமபிரானுக்கு பெரும் கஷ்டம் வந்துவிட்டதாம். தனக்குத் தெரிந்த ஒருவரிடம் தன் உதவியாளை அனுப்பி கடன் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அந்தாள், தருமபிரானின் உதவியாளரைப் பார்த்து; கடன் தருவதில் கடினம் இல்லை. எனினும் கடனை வாங்கும்போது இருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும்போதும் இருக்குமானால் கடன் தரச் சம்மதம் என்று தருமரிடம் சொல்லு என அனுப்பி வைத்தார்.

உதவியாளன் தருமபிரானை வணங்கி சுவாமி கடனை வாங்கும்போது இருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும்போதும் இருக்குமாயின் கடன் தருவாகச் சொல்லுகிறார் என்றான்.

சிலநிமிடம் ஆழ்ந்து சிந்தித்த தருமர் கடன் வேண்டாம் என்று சொல்லிவிடு என்றார்.

விளக்கம் தெரியாத அந்த உதவியாளன் ஏன் சுவாமி என வினவினார். அதற்குத் தருமர் சொல்லுகிறார்; கடனை வாங்கும் போது இருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும்போது இருப்பதில்லை ஆகையால்தான் கடன் வேண்டாம் என்றேன் என அவரின் விளக்கம் இருந்தது.

கடன் என்பது மிகப்பெரும் பயங்கரமான பேய். நாம் உறங்கும்போது அது உறங்காமல் உயர்ந்து கொண்டே இருக்கும். அதனால்தான் கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று சொல்லப்பட்டது.

ஆக, கடனை வாங்குபவனும் கடனைக் கொடுப்பவனும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் தகைமை தன்னிடம் உண்டா? என்பதை அறிந்தபின்பே கடனை வாங்க வேண்டும்.

தவிர, கடனைக் கொடுப்பவன் கடனை பெற்றவனை கந்தறுத்து விடும் நோக்கில் செயற்படக்கூடாது. அவ்வாறு பெற்றுக்கொள்ளும் பணம் தந்தவனையும் வாங்கியவனையும் வேரறுக்கும்.

ஆகையால் கடன் கொடுப்பது என்பது ஆபத்தில் உதவுவதாகவும் ஒருவனை வாழ வைப்ப தாகவும் இருக்க வேண்டும். அதுவே தர்மம். தர்மத்தை மீறிய பொருளீட்டம் அனைத்து இருப்பையும் கொண்டேகும்.

இந்த உண்மையை எந்தச் சந்தர்ப்பத்திலும் எவரும் மறந்து விடக்கூடாது.

இவை ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் கந்து வட்டிக் கொடுமையில் ஒரு குடும்பம் நெருப்பூட்டி எரிந்து இறந்து போயுள்ளது.

என்னே கொடுமை! என்று இதயம் கருகு மளவில் அந்தச் சம்பவம் உள்ளது. வயிற்றுக் குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்று பாடிய பாரதி வாழ்ந்த மண்ணில் அப்படியயாரு அவலம் என்றால், எங்கள் மண்ணில் மீற்றர் வட்டி சாவை நோக்கி இழுத்துச் செல்கிறது.

அந்தோ! மீற்றர் வட்டிக் கொடுமை கழுத்தில் கயிறை மாட்டுதல் என்ற அவலமான முடிவுக்கு இட்டுச் செல்கிறது.

இந்த மோசமான சம்பவங்களைப் பார்த்த பின்பும் மீற்றர் வட்டிக்குப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் நடக்கிறதெனில், இதை என்ன வென்று சொல்வது. 

எனவே மீற்றர் வட்டிக் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைப்போம். கடன் சுமைப்பட்டவரும் அவரின் குடும்பமும் வாழுதல் என்ற வகையில் உதவுதல் என்பதாக கடன் உதவி இருக்கட்டும்.

அந்த உதவி உயிர் காத்த குடும்பத்தை வாழ வைத்த புண்ணியத்தைத் தரும். இது சத்தியம்.

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...