கருவில் கை வைத்த மருத்துவர்

இத்தனை நாட்கள் என்ன செய்தது அரசு நிர்வாகம்..? ஆயிரக் கணக்கான கருவில் கை வைத்த மருத்துவர்: தமிழகத்தில் அரங்கேறி இருக்கும் அதிபயங்கர கொடூரம்..!

கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று தெரிவிப்பதே சட்டப்படி குற்றம் என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்பு சட்டவிரோதமாக நடைபெற்றுள்ளது என்றால் உங்களால் ஜீரணிக்க முடிகிறதா..?

திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் மூன்று ஸ்கேன் மையங்களில் சேர்ந்து தான் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றன.

ஸ்கேன் மையத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறியும் சோதனை நடைபெற்றதாகவும், அதனோடு தொடர்புடைய மருத்துவ மனையில் உள்ள ஒரு மருத்துவர் பத்து ஆண்டுகளாக ஆயிரக்கணக்கில் கருகலைப்புகளை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் எப்படியோ வெளியில் கசிந்து மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையின் போது பல திடுக்கிடும் ஆவணங்கள் கிடைத்துள்ளது.

கிடைத்த இந்த ஆவணங்கள் மூலம், ஒரு தனியார் மருத்துவமனையில் பல பெண்களுக்கு கருவில் இருப்பது பெண் குழந்தையா என்று அறியும் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், விதிகளை மீறி கருக்கலைப்பு செய்யப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்றால் முறையான ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, சட்ட சிக்கல்களை தாண்டித்தான் செய்ய முடியும். ஆனால் மூன்று தனியார் ஸ்கேன் மையங்கள் முறையான படிவங்கள் எதையும் பூர்த்தி செய்யாமல் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டதால், குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்று ஸ்கேன் மையங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

விதிகளை மீறி கருக்கலைப்பில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனையும் இழுத்து மூடி  வைக்கப்பட்டுள்ளது.

இதோடு மட்டும் அல்லாது தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தேடப்பட்டு வருவதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...