மசூதிக்கு நிலமளித்த பிராமணர்கள்

​மசூதிக்கட்ட நிலம் அளித்த பிராமணர்கள்... பண உதவி செய்த சீக்கியர்கள்!

மசூதிக்கு நிலம் பணமளித்த பிராமணர்கள் சீக்கியர்கள்

​பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் உள்ள மூம் கிராமத்தில் மசூதிக்காக பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் நிலம் வழங்கிய நிலையில், அதை கட்டுவதற்காக சீக்கியர்கள் பண உதவி செய்துள்ளனர். நாட்டின் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த சம்பவம் தற்போது வடநாட்டு ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

“இதுவரை பாபா மொமின்ஷா மசூதியில் உள்ள இரு அறைகளில் நாங்கள் தொழுகை செய்து வந்தோம். பண்டிட் பிராதாரி நிலம் வழங்கியதை அடுத்து, மசூதியை கட்டுவதற்காக பணிகளை தொடங்கியுள்ளோம். அவர்கள் (கிராம மக்கள்) நிலத்தை மட்டும் கொடுக்கவில்லை, கட்டுமானத்தை மேற்கொள்வதற்காக நிதியுதவியையும் செய்தனர். அவர்களில் பலர் சீக்கியர்கள்!” என்கிறார் மசூதி கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்துவரும் நிஜம் கான்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அதே ஊரைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான பண்டிட் புருஷோத்தம் லால்,  “எங்கள் ஊரில் சிவன் கோவில் ஒன்றை கட்டிவருகிறோம், அதன் அருகில் ஒரு குருவாரா (சீக்கியர்களின் வழிபாட்டுத் தளம்) உள்ளது. எனவே, எங்கள் ஊரிலேயே ஒரு மசூதி கட்டவேண்டும் என்பது எங்களின் கனவு. எங்களை பொறுத்தவரை எல்லோரும் சமம். பஞ்சாபியாய் இருப்பதால் நாங்கள் குழந்தை பருவம் முதலே வேற்றுமையில் ஒற்றுமையை பேணி வருகிறோம். மதநல்லிணக்கமே எங்கள் பெருமை!”.

புதிதாக கட்டப்படும் மசூதி குறித்து கருத்து தெரிவித்துள்ள உள்ளூர்காரர் ஒருவர், மசூதி கட்டப்படுவதன் மூலம் ஊரில் உள்ள மூன்று பெரிய சமூகங்களும் தங்கள் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டி ஒருவருக்கு ஒருவர் நெருக்கமான உறவை பேணமுடியும் என்றும், இதன்மூலம், பஞ்சாப்பும், பஞ்சாப்பிகளும் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்வதாக தெரிவித்துள்ளார்.

“வெறுப்புணர்வைத் தூண்டி அரசியல் செய்யமுயலும் அரசியல்வாதிகளுக்கு இதன்மூலம் நாங்கள் தெளிவாக பதிலளித்துள்ளோம். அவர்களது சதிக்குள் நாங்கள் சிக்க மாட்டோம்!” என நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

40,000-க்கும் அதிகமான சீக்கியர்களைக் கொண்ட மூம் கிராமத்தில் தலா 400-க்கும் குறைவான இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களே வசித்துவருகின்றனர். 300 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்ட மூம் கிராமம் தனது வரலாறு முழுக்க மத நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக திகழந்து வருகிறது.

இந்து இசுலாம் சீக்கியம்
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...