மகனை கொன்ற தாய்

​திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மகனை கொலை செய்த தாய்..!

அற்பசுகத்திற்காக மகனை கொன்ற தாய்

சேலம் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மகனை, பெற்ற தாயே கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள என்.எஸ்.கே. தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். தறி தொழிலாளியான இவரது மனைவி மைனாவதி, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த தனது ஏழு வயது மகன் சசிகுமாரை காணவில்லை என கூறி, கடந்த 5ம் தேதி ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

ஆனால், அந்த சிறுவனை காணாமல் போகச் செய்தவர் அவர்தான் என்பது, அப்போது போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தெரிவிந்திருக்கவில்லை. சிறுவன் சசிகுமார் காணாமல் போன வழக்கு தொடர்பாக, போலீசார் மைனாவதியிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் கூறிய தகவல்களும், மகன் காணாமல் போனதாக கூறிய புகாரிலும் பல முரண்பாடுகள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதற்குமேல், பொய்களை சொல்லி சமாளிக்க முடியாத மைனாவதி, அனைத்து உண்மைகளையும் போலீசாரிடம் கூறி விட்டார். 

மைனாவதியின் கணவரின் நண்பரான தியாகராஜன், இவர்களின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதில், மைனாவதிக்கும், தியாகராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. தனது கணவர் வெளியே செல்லும்  நேரங்களில், மைனாவதியும், தியாகராஜனும் தனியாக சந்தித்து தங்களின் உறவை வளர்த்துள்ளனர். 

ஒரு கட்டத்தில் இவர்களின் உறவுக்கு தனது மகன் சசிகுமார் இடையூறாக இருந்து விடுவார் என்று எண்ணிய மைனாவதி, மகனையே கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து கடந்த 5ம் தேதி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மகனை பிச்சாம்பாளையம் சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

 பின்னர் அங்கிருந்த கிணற்றில் தள்ளி அவனை கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாதவர் போல் வீட்டுக்கு வந்து, தனது மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அவரது நாடகம் அம்பலமானதால் அவர் காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டார். பின்னர் மைனாவதியை சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர் அடையாளம் காட்டிய கிணற்றிலிருந்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சிறுவன் சசிகுமாரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயே, பெற்ற மகனை கொலை செய்த சம்பவத்தை நம்பவே முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணத்தை மீறிய உறவால் மகனையே கொலை செய்த வழக்கில் கைதான தாய் மைனாவதி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தியாகராஜனை போலீசார் தேடி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்டால், இந்த கொலைக்கான பின்னணி குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவரலாம் என கூறப்படுகிறது.

மகனை கொன்ற தாய்
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...