முகப்பரு வராமல் இருக்க எளிய வழிமுறைகள்.

முகத்தைப் பளபளப்பாகப் பேணிக்காக்க வேண்டும் என்கிற எண்ணம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உண்டு.முகத்தில் வரும் புள்ளிகளுக்கு Acne என்று பெயர்,pimples என்றும் அழைப்பார்கள். இது வெள்ளை நிறத்திலோ, சிவந்தோ காணப்படும். தோல் அடைபட்டு இருக்கும் நிலை இது. இளம் வயதில் பலருக்கும் முகத்தில் பரு வரலாம். முகத்தில் முடி வளரும் இடத்தில் அழிந்த திசுக்களுடன் எண்ணெய்ப் பசையும் சேர்ந்து அடைபட்டுப் போவதால் பரு வருகிறது. முகம், கழுத்து, மார்பு, பின்புறம், தோள்பட்டை போன்ற இடங்களில் இது வரலாம்.பரு வலியை ஏற்படுத்துவதுடன் மனத் துன்பத்தையும் கொடுக்கும். ஒன்று மறைந்தால் இன்னொன்று வரும். ஒழுங்காகச் சிகிச்சை செய்தால் முழுமையாகக் குறைத்துவிடலாம்.

முகப்பரு எவ்வாறு வருகின்றது?

 

முகத்தில் கொழுப்பு அதிகமாக வெளியேறுதல், கிருமித் தொந்தரவு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, ஒரு சில மருந்துகள் ,அதிகக் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதும் இதற்குக் காரணம். இளம் வயதினருக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பருக்கள் வரலாம்.

ஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பசை அதிகரிப்பு, கிருமி தொற்று போன்றவை முகப்பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. இந்த பருக்களில் சீழ்போன்ற திரவம் நிறைந்து கரும்புள்ளிகளையும் உருவாக்கும். இந்த சீழில் உள்ள கிருமிகள் பரவி மேலும் முகப்பருக்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.எனவே முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பருக்கள் மறைய என்ன செய்யவேண்டும்?

 

எலுமிச்சைச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். பன்னீர் வாங்கும்போது, அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.

பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறி உடல் ஒளிபெறும்.சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட  பரு மறையும்.

ரோஜா மொட்டுக்களை எடுத்துச் சூடான நீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை செய்துவர முகப் பருக்கள் நீங்கி சருமம் பொலிவடையும்.

வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி  15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ முகப்பருக்கள் நீங்கும்.

சோற்றுக்கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. காற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து நீரில் நன்றாக அலசியபின் சோற்றை கூழாக்கி முகத்தில் தடவிவர பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளைப் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கி, நசுக்கி முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் வைத்துத் தேய்க்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்ய முகப்பரு மறையும்.

ஆப்பிள் மற்றும் பப்பாளிச் சாற்றை முகத்தில் பூச வேண்டும். ஆப்பிள் பழத்தை நன்றாக நசித்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசிவர, பருக்கள் மறையும். வாரம் இருமுறை இதைச் செய்ய வேண்டும். ஒரு டீஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாற்றை ஒரு டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு துடைத்துவிடவும். சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கி பருத்தொல்லை அகலும்.

 

 

முகப்பருக்களைத் தடுக்க என்ன செய்யவேண்டும் ?

பவுடர், அழகு சாதன கிரீம்கள் உபயோகப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை நிறையச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு லீட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், பாலாடை போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.பருக்கள் ஏற்பட மலச்சிக்கல் ஒரு முக்கியக் காரணி. அன்றாட உணவுபழக்கத்தைச் சரிசெய்வதன் மூலமாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பருக்களைக் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், கடைகளில் கிடைக்கும் எந்தவித வாசனை சோப்புகளையும் லோஷன்களையும் பயன்படுத்தக் கூடாது.

முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயனத்தன்மை இருக்கிறது. இது சருமத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.

தலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவற்றைத் தனித்தனியாக ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். முகப்பரு இருப்பவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றொருவர் பயன்படுத்தும்போது அவருக்கும் பரவக்கூடும்.

முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ​தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும்.அவ்வாறுசெய்யும்போது வெளியேறும் வியர்வையால் சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி பருக்கள் வராமல் தடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *