தலைவலிக்கான காரணங்களும் அதற்கான நிவாரணிகளும்.

பொதுவாக தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியை உணரும் ஒரு நிலையாகும். தலைவலி எல்லா தரப்பினருக்கும் வருகின்ற ஒரு பொதுவான நோய் என்றாலும் அதில் சில வரப்போகும் நோய்களுக்கு அறிகுறியாக வித்தியாசமாகவும் ஏற்படுவதுண்டு. தலைவலி சாதாரண காரணத்தினாலும் வரலாம், தீவிர பாதிப்பினாலும் வரலாம்.

மண்டை ஓட்டைச் சுற்றியிருக்கும் தமனி, சிரை, தோல் வழியேதான் முதலில் வலி உணரப்படுகிறது. பிறகு ரத்தக் குழாய்களின் மூலம் பரவி தலையின் இருபுறங்கள் மற்றும் கழுத்துக்கும் பரவுகிறது. கண்கள், மூக்குத் துவாரங்கள், பற்கள் வழியாகவும் தெரியலாம். பெரும்பாலான தலைவலிகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விட முடியும்.

தலைவலி வகைகள்

1. மன உளைச்சல் தலைவலி
2. சைனஸ் – தலைவலி
3. விபத்துகளுக்குப் பின்னால் ஏற்படும் தலைவலி
4. தமனிகள் தொடர்பான தலைவலி
5. தொற்றுகளினால் ஏற்படும் தலைவலி
6. வளர்சிதை மாற்றம் சம்பந்தமான தலைவலி
7. தலையிலுள்ள கண், மூக்கு, பல், வாய் மற்றும் முகம் ஆகியவற்றின் உருவ அமைப்புடன் தொடர்புடைய தலைவலி.
8. தலையிலுள்ள உறுப்புகளின் நரம்புகளில் பிரச்சனைகளால் வரும் தலைவலி
9. குழந்தைகளுக்கு வரும் தலைவலி
10. வயதானவர்களுக்கு வரும் தலைவலி
11. ஒற்றைத் தலைவலி

மன உளைச்சல் தலைவலி

கழுத்தின் பின் தசைகளில்தான் இந்த வலி உருவாகும். இரவு உறக்கத்திற்குப் பிறகு தசைகள் இறுகி வலி ஆரம்பமாகும். ஒவ்வொரு முறை இந்த மன உளைச்சல் ஏற்படும்போதும் கழுத்தின் பின் தசையில் இறுக்கம் ஏற்பட்டு வலி ஆரம்பமாகும்.

இரண்டு பக்கமும் வலி வரலாம். தலையை இறுக்கமாகப் பிடித்தாற்போல் இருக்கும். நீண்ட காலமாக இருக்கும். 25 – 30 வயதில் ஆரம்பிக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் வரும்.

 

சைனஸ் தலைவலி

மூக்கு அடைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். தலைவலி இருக்கும். மூக்கிலிருந்து நீர் வடியலாம். குனிய முடியாது. கண்களுக்கு மேலும் கீழும் வலி இருக்கும். முன் மண்டை முழுவதும் பரவி வலிக்கும். கண்களுக்கு அடியில் இருக்கும் காற்றறைகளில் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி கடுமையாக இருக்கும்.

 

தொற்றுகளினால் ஏற்படும் தலைவலி

எச்.ஐ.வி கிருமிகள் தாக்கிய எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மூளையில் மெனிஞ்சைடிஸ் மற்றும் கட்டிகள் தாக்கத்தாலும் தலைவலி ஏற்படும். மூளையின் உள்ளே தொற்றுகளின் தாக்கத்தால் அழுத்தம் அதிகமாகிறது. அதனால் உள்ளே நாளங்கள் இழுக்கப்பட்டு தாங்கமுடியாத தலைவலி ஏற்படும். தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பக்கூடிய இந்த வலி தலையை முன்னோக்கி குனியும்போது அதிகரிக்கும்.

ஒரே நாளில் பலமுறை விட்டுவிட்டு வரும் க்ளஸ்டர் (Cluster) தலைவலி

தூங்க முடியாமல் கண் இமைகள் படபடத்து அடித்துக் கொள்ளும். வியர்த்துக் கொட்டும். காலை, மதியம், மாலை என்று எப்போது வந்தாலும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் சரியாகத் தாக்கும். நோயாளிக்கு அதிக எரிச்சலைக் கொடுக்கும். படுத்துக் கொண்டு இருப்பதைவிட உட்கார்ந்தால் சற்று சௌகரியமாக இருக்கும். இருட்டான அமைதியான அறையை நோயாளிகள் நாடுவார்கள். கண்ணைச் சுற்றியுள்ள தமனிகளின் அசாதாரணத் தன்மையால் இந்த வலி ஏற்படுகிறது.

நீண்ட நாள் தலைவலி

மாதம் 15 நாட்களுக்குத் தலைவலி வந்து தொல்லை தருகிறது. வலியின் தீவிரம், இடம், தன்மை என்று அதன் ஒவ்வொரு தாக்கத்திலும் வேறுபடும். அதுமட்டுமின்றி தலைவலியுடன் வயிற்றுப் புரட்டல், வாந்தி, எரிச்சல், மனச்சோர்வு, ஞாபகத்திறனில் பிரச்சனை, பதட்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகளும் இவர்களுக்கு இருக்கலாம்.

தலையில் அடி மற்றும் அது சார்ந்த தலைவலி

தலையில் சாதாரண காயம் ஏற்பட்டு அடிபட்ட 30 நிமிடங்களுக்குள் நினைவிழப்பு ஏற்பட்டிருந்தாலும் தலைவலி வரும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வாழ்நாள் முழுவதும்கூட இந்த தலைவலி தொடரவாய்ப்பு உள்ளது. விபத்து ஏற்பட்டு 1 வாரம் முதல் 3 மாதங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் வலி ஆரம்பிக்கலாம்.

 

தலைவலிக்கான காரணங்கள்

*மிகச் சிறிய அல்லது மிகப் பெரிய தொற்றுநோய்கள்
*ஒவ்வாமைகள்.
*மருந்துகள், மன உளைச்சல், அல்லது கவலை.
*குறிப்பிட்ட சில உணவுகள் .
*தலைக் காயம்.
*சளி உறுத்தல்.
*போதைமருந்துகள் அல்லது நச்சுப் பொருட்களுடன் தொடர்பு.
*இரத்தக்குழாய் விரிவடைதல் அல்லது கட்டி போன்ற மூளை சம்பந்தமான பிரச்சினைகள்.
*தடிமல், காய்ச்சல் அல்லது வைரஸால் வரக்கூடிய சுகவீனம்.
*பல் வலி அல்லது பல்சம்பந்தமான வேறு பிரச்சினை.
*அளவுக்கதிகமான களைப்பு.
*பசி.

தலை வலி நிவாரணிகள்

இஞ்சி

இஞ்சியை அரைத்து அதனை நீரில் கொதிக்க விடவும். அதில் 1 தேக்கரண்டி தேனை கலந்த்து பருகவும். இதனை தொடர்ந்து செய்தால் தலை வலி பறந்து போய்விடும்.

புதினா

புதினா எண்ணெயை துணியில் தடவி நெற்றியில் வைக்கவும். இவ்வெண்ணெய் கொண்டு ஆவியும் பிடிக்கலாம்.

பட்டை

பட்டை பொடியைதேனில் குழைத்து சாப்பிட்டால் தலை வலி நீங்கும்.

 

கிராம்பு

கிராம்பை அவ்வப்போது கடித்து வந்தால் தலை வலிக்கு சுகமாக இருக்கும்.

துளசி

துளசியை நீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால் தலை வலி நீங்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *